>>>கல்வி உரிமை மறுக்கப்படும் தளிர்கள்: இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்-

சக குழந்தைகள், புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் தான் குழந்தை தொழிலாளர்கள். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 21 கோடி பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யார் குழந்தை தொழிலாளர்:உலகில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. சில குழந்தைகள், பள்ளி முடித்தவுடனும் சிலர் பகுதி நேரமாகவும் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டர். ஆனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. இந்திய அரசும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவிக்கிறது.

இந்தியாவில் அதிகம்:உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் . இது இந்தியாவில் இப்பிரச்னை, எந்தளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், குறைந்த ஊதியத்தில், விடுமுறை இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி அவசியம் :அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்து, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வசதி கிடைத்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம். 
நன்றி-தினமலர்