>>>விலையை உயர்த்தின நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் - பெற்றோர் அதிர்ச்சி!

 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய யுக்தியை பயன்படுத்தி, நோட்சுகளின் விலையை உயர்த்தி இருப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரமாகி விட்ட நிலையில், அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியர் பயன்படுத்தும் புத்தகங்கள், நோட்டுகளை, அரசே நேரடியாக வழங்கி வருகிறது. தனியார் பள்ளிகள் மொத்தமாக கொள்முதல் செய்து, மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகின்றன.
வெளியீடு: நோட்சுகள் மட்டும் வெளி மார்க்கெட்டில் வாங்கப்படுகிறது. கோனார், மாஸ்டர், ஜெயக்குமார், வெற்றி, பிரிமியர், சி.என்.சி., டைமண்ட், கங்கா, சுறா, டாப் ஸ்டார், டான், அறிவாளி, பாரதி, ஈஸி, சேவியர், பொதிகை ஆகிய நிறுவனங்கள் சார்பில், நோட்சுகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிறுவனங்கள், கடந்த ஆண்டு வரை, கல்வி ஆண்டுக்கு பாட ரீதியாக ஒரே ஒரு நோட்சை மட்டுமே விற்பனைக்காக வெளியிட்டன.
ஆனால், நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு, பள்ளிகளில் முப்பருவ கல்வி முறையை (செமஸ்டர்) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால், நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், மூன்று பருவ முறைக்கும் தனித்தனியாக நோட்சுகளை வெளிட்டுள்ளன. கடந்த ஆண்டு, 250 முதல் 300 பக்கங்களை கொண்ட நோட்சுகள், குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சமாக 110 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டன.
மூன்று மடங்கு: தற்போதைய பாட முறைக்கேற்ப கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள முதல் பருவ நோட்சுகள், 100 முதல் 120 பக்கங்களை கொண்டுள்ளன. அவற்றின் விலை, 50 முதல் 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரண்டாம் பருவத்துக்கான நோட்சுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருந்தபோதிலும், அவற்றின் விலைப்பட்டியல் கடைகளுக்கு அனுப்பப்பட்டு ஆர்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பருவ நோட்சுகள், 76 முதல் 120 பக்கங்களை கொண்டுள்ளன, இவற்றின் விலை, 60 முதல் 90 ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை, ஒரு பாடத்துக்கு நோட்ஸ் வகைக்கு, 45 முதல் 75 ரூபாய் வரை செலவு செய்து வந்த பெற்றோர், நடப்பு கல்வி ஆண்டில், மூன்று பருவ நோட்சுகளுக்கு, 150 முதல் 250 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில், வெற்றி, சுறா ஆகிய நிறுவனங்கள், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு சேர்த்து, ஒரே நோட்சை வெளியிட்டுள்ளன. இந்த நோட்சின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், பேப்பர், கலிங்கம், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி, விலையை உயர்த்தி உள்ளன. இது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மூன்று பருவத்துக்கும் சேர்த்து ஒரே நோட்சை தயாரித்து வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நன்றி-தினமலர்