>>>குரூப்-4 பணிக்கு தனி நிரந்தர பதிவு வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தனியாக நிரந்தரப் பதிவை செய்ய தேவையில்லை என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரந்தரப் பதிவும், அவ்வப்போது, வெளியிடும் அறிக்கைகளுக்கான இணையவழிப் பதிவையும் அறிமுகப்படுத்தி உள்ளது. விண்ணப்பதாரரின் நலனைக் கருத்தில் கொண்டு, குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விவரங்களையும், நிரந்தரப் பதிவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தனியாக நிரந்தரப் பதிவைச் செய்யத் தேவையில்லை. நேரடியாக, குரூப்-4க்கான இணையவழி விண்ணப்பத்தை பதிவு செய்தால், கிடைக்கும் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லே, நிரந்தரப் பதிவாக ஏற்றுக் கொள்ளப்படும். இது, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு செல்லத்தக்கது. ஏற்கனவே, நிரந்தரப் பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள், குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, தனியே விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில், விண்ணப்பதாரர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் புகைப்படம் கையொப்பம் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட தேர்வுக்கு (குரூப்-4 அல்லது குரூப்- 2 என, உரிய பதவிகளுக்கு) உரிய கல்வித் தகுதி, தொழில் நுட்பக் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை, ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே, தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.