தமிழகத்தில், 36 லட்சம் பேரிடம் உடல் அடையாளக் கூறுகளை, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்து, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு அனுப்பியும், இன்னமும், "ஆதார் எண்'களைப் பெற முடியவில்லை. இதன் பாதிப்பால், உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என, தமிழக அரசின் அறிவிப்பும் தாமதமாகும் எனத் தெரிகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில், "ஆதார்' அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது. அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.துவங்கவில்லை. இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது. கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்