>>>இன்று உலக மக்கள் தொகை தினம் - எப்போதும் 2வது இடம்

உலகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

700 கோடி:
உலகின் தற்போதைய மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டது. இந்தியாவின் மக்கள் தொகை, 2011ம் ஆண்டு கணக்கின் படி 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 2வது இடம். முதல் இடத்தில் சீனா உள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

சுகாதாரம்:
ஐ.நா., சபை அறிக்கையின் படி, உலகில் ஒரு நாளைக்கு 800 பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என மதிப்பிட்டுள்ளது. இதற்கு சுகாதார வசதி குறைவும் ஒரு காரணம். உயிரிழப்பு இல்லாத பிரசவம் நடப்பதற்கு, உரிய சுகாதார வசதிகளை ஒவ்வொரு அரசும் ஏற்படுத்த வேண்டும்.

என்னென்ன பாதிப்புகள்:
மக்கள் தொகை அதிகரிப்பதால் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரம், உணவு, கல்வி, போக்குவரத்து, இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு குடும்பக்கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகை பற்றிய கல்வி, பள்ளிகளில் இடம் பெற வேண்டும். 
நன்றி-தினமலர்