>>>மலைப்பகுதியில் புதிய பள்ளிகள் துவங்க ஆவணங்கள் ஏற்பாடு

புதிய பள்ளிகள் அமைப்பது குறித்த ஆய்வை, செயற்கைக்கோள் மூலம் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் விதிப்படி, ஒரு கிலோ மீட்டருக்கு அருகில், ஒரு ஆரம்பப் பள்ளி இருக்க வேண்டும். மக்களின் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு, சில இடங்களில், புதிய பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, மலைப்பகுதியில் பள்ளிகள் இருந்தாலும், கூடுதல் பள்ளிகள் அமைத்தால், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள், படிக்க வசதியாக அமையும். பல இடங்களில், பள்ளிகள், தூரப்படி ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்தாலும், மலைப்பகுதியில், பள்ளியை எளிதில் அடைய முடியாத நிலை இருக்கும். இதுபோன்ற இடங்களுக்கு, தேவைக்கேற்ப, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில், சில இடங்களில் பள்ளிகள் துவங்க, மாநில எஸ்.எஸ்.ஏ., ஆணையருக்கு, பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. ஒரு கிலோ மீட்டருக்குள் பள்ளிகள் இருப்பதாக கூறி, அனுமதி வழங்கப்படவில்லை. இதற்காக, கோரிக்கைகளின் நியாயங்களை விளக்க, செயற்கைக்கோள் மூலம் பள்ளிகளை படம் எடுத்து, பள்ளியின் தேவையை விளக்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஜியோகிராபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம் என்ற முறையில், பள்ளி தேவையான இடம், அதன் அருகே உள்ள மற்ற பள்ளிகளின் படம், அவற்றுக்கு செல்வதில் உள்ள சிரமம், மாற்றுப் பாதையுடன் புதிய பள்ளி அமைக்க தேவையான இடம், புதிய பள்ளியால் பயன்பெறும் குடியிருப்புகள், மாணவர்கள் சிரமத்துடன் பழைய பள்ளிக்கு சென்று வருதல் போன்றவற்றை ஆவணப்படுத்தி, எஸ்.எஸ்.ஏ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
நியாயம் அறிந்து, புதிய பள்ளிக்கு அனுமதி வழங்க, எஸ்.எஸ்.ஏ., பரிந்துரைக்கும். அதற்கான ஏற்பாடுகள், ஈரோடு மாவட்ட எஸ்.எஸ்.ஏ.,மூலம் நடந்து வருகிறது. ஆவணங்கள் சமர்ப்பித்ததும், பல புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.