>>>10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் (அனைவருக்கும் கட்டாய இடைநிலை கல்வி) மூலம், படிப்பில் பிந்தங்கிய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற காரணங்களால் கிராம, நகர் புறங்களில் இடைநிலை கல்வியை கடக்க முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது. இதை தடுத்து, அனைவரும் கட்டாயம் 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் கொண்டு வரப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசு பள்ளிகளில் 9, 10 வகுப்பு மாணவர்களின் படிப்பு நிலவரத்தை மூன்று நிலைகளில் (நன்கு, ஓரளவு, கடைசி நிலை) ஆய்வு செய்து, மூன்றாவது நிலை மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்களை 10ம் வகுப்பில் அவசியம் தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.
இப்பணிகள் சரவர நடக்காததால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வித் துறையினர் கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளை விட, வரும் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, 9,10 ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் படிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு பணியை துவங்கியுள்ளனர். ஆய்வின் போது, சரியாக எழுத, படிக்க தெரியாத பள்ளிகள் கணக்கிடப்பட்டு, அப்பள்ளிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கிராம பள்ளிகளில் 9,10ம் வகுப்புகளில் சில மாணவர்கள் எழுத, படிக்க தெரியாமல் வந்தோம்,சென்றோம் என்ற நிலையை கடை பிடிப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றார்.