>>>மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார்.
மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு மொத்தம் 28,275 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கான ரேண்டம் எண் மற்றும் ரேங்க் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகளிலும், 13 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் 1653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. இது தவிர செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 50 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 100 ஆக உயர்த்த மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 2,145 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். இது தவிர மீதமுள்ள இடங்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 11 மணிக்குத் தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். அடுத்த 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக கவுன்சிலிங் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.