>>>27 பதக்கங்களை அள்ளிய கால்நடை மருத்துவ பல்கலை மாணவி

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி ஜெபரோஸ் ஜெனிபர், 27 தங்க பதக்கங்களை பெற்று அசத்தினார்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 15வது பட்டமளிப்பு விழா, தமிழக கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று நடந்தது. விழாவில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 135 பேரும், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 20, உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 19 என, மொத்தம் 174 பேர் இளநிலை பட்டங்களையும், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 32 பேரும், மீன்வள அறிவியல் படிப்பிற்கு ஏழு பேர் என, மொத்தம் 39 பேர் முதுகலை பட்டங்களையும், ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் ஐந்து பேரும், முதுநிலை பட்டயத்தை ஒருவர் என, மொத்தம் 225 பட்டதாரிகளுக்கு, தமிழக கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.
இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் ஜெபரோஸ் ஜெனிபர் 27 பதக்கங்களையும், சுவாதி 5 பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் கருப்பன்னசாமி 4 பதக்கங்களையும், தூத்துக்குடி மீன்வள கல்லூரி மாணவர் சலோனி சிவம் 5 என, மொத்தம் 99 தங்க பதக்கங்களை, மாணவர்களுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா வழங்கினார்.
அரியானா தேசிய பால்வள ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அனில்குமார் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. 1950ல் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2010ல், 121.84 டன்னாக உயர்ந்துள்ளது. 1968ல், 112 கிராமாக இருந்த பாலின் அளவு, தற்போது, 2010ல், 281 கிராமாக உயர்ந்துள்ளது.
உலகளவில், உணவு உற்பத்தியில், இந்தியா இரண்டாம் இடமும், முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. ஆசியாவின், முதல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இப்பல்கலையில், பட்டம் பெறுபவர்களுக்கு தனி சிறப்பு உண்டு. "கால்நடை மருத்துவர் தான், உலகில் சிறந்த டாக்டர். ஏனெனில், அவர் நோயாளியிடம் நோயை கேட்டு தெரிந்து கொள்பவர் அல்ல. தானாகவே, அறிந்து கொள்ள கூடியவர்&' என்பர். அத்தகைய பணியை கால்நடை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அனில்குமார் பேசினார்.