>>>இந்தியமுறை மருத்துவ படிப்பு: 146 இடங்கள் நிரம்பின

இந்திய முறை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், நேற்று 146 இடங்கள் நிரம்பின. வரும், 18ம் தேதி வரை  கலந்தாய்வு நடைபெறுகிறது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய, இந்திய முறை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு, அரசு கல்லூரிகளில், 786 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரம்புவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க, மொத்தம், 1,748 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில், பல்வேறு காரணங்களுக்காக, 46 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதியுள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி, சென்னை, அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில், நேற்று துவங்கிய கலந்தாய்வில் பங்கேற்க, சிறப்புப் பிரிவினர், 35 பேர் உட்பட மொத்தம், 335 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். நேற்றைய கலந்தாய்வின் முடிவில், சிறப்புப் பிரிவில், 11 இடங்கள் உட்பட, 146 இடங்கள் நிரம்பி உள்ளன.