>>>"மாதம் 20 பள்ளிகளை ஆய்வு செய்தால் கல்வித்தரம் உயரும்"

மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில், 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபிதா பேசும்போது, பள்ளி கல்வித்துறை தொடர்பாக நாங்கள் எடுத்து செல்லும் திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக கேட்டறிந்து அதற்கான தீர்வினை உடனடியாக வழங்குகிறார்.
இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மாணவ-மாணவிகளுக்கு இலவச திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகள் ஆகும்.
நீங்கள் ஒருமாதத்தில் குறைந்த பட்சம் 5 பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளது. ஆனால் மாதந்தோறும் 20 பள்ளிகள் வரை ஆய்வு நடத்தலாம். அதன் மூலம் கல்வி தரம் உயரும். அரசு பள்ளிகள் தவிர அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும்.
நீங்கள் அதிகமான பள்ளிகளை ஆய்வு செய்யும் போது மிக சிறப்பாக செயல்படும் பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்து, மற்ற பள்ளிகள் அந்த பள்ளியை பார்வையிட செய்ய வேண்டும். மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்கிட வேண்டும்.