>>>வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலையில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கு, 9.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இன்று காலை, 10 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை, தேர்வு நடக்கிறது. 4,000 மையங்களில் நடக்கும் தேர்வை, வீடியோவில் பதிவு செய்ய, தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில், எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேர்வாணையம் எடுத்துள்ளது.