>>>கொள்ளையடிக்கும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள்

தமிழக அரசின் முப்பருவ தேர்வு முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், ஒன்றுக்கு பதில், மூன்று பதிப்புகளாக நோட்ஸ்களை வெளியிட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் புத்தகங்கள், நோட்டுக்களை அரசே நேரடியாக வழங்கியது. தனியார் பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு இவற்றை வழங்கின. நோட்ஸ்களை மட்டும், வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்கின்றனர். பல்வேறு நிறுவனங்கள் சார்பில், நோட்ஸ்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிறுவனங்கள், கடந்த ஆண்டு வரை, கல்வி ஆண்டுக்கு, பாட ரீதியாக, ஒரே ஒரு நோட்ஸ்சை மட்டுமே வெளியிட்டன. நடப்பு கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் முப்பருவ கல்வி முறை திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால், நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், மூன்று பருவ முறைக்கும் தனித்தனியாக, நோட்ஸ்களை வெளியிட்டுள்ளன.
தற்போது, பள்ளிகளில், முதல் பருவ தேர்வு முடிந்து விட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடங்கள் நடத்த உள்ளனர். இதை குறிவைத்து, நோட்ஸ் நிறுவனங்கள், இரண்டாம் பருவ தேர்வுக்கான நோட்ஸ்களை, விற்பனைக்கு அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு, முழு வருடத்திற்குமான, 250 முதல், 300 பக்கங்களை கொண்ட நோட்ஸ் குறைந்தபட்சம், 45 முதல், அதிகபட்சமாக, 110 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், 100 முதல், 120 பக்கங்களை கொண்ட, இந்தாண்டு முதல் பருவ நோட்ஸ்கள், 50 முதல், 75 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டன. தற்போது விற்பனைக்கு வந்துள்ள, இரண்டாம் பருவ நோட்ஸ்கள், 60 முதல், 90 ரூபாய் வரை, விற்கப்படுகிறது. டிசம்பரில் இரண்டாம் பருவ தேர்வு முடிந்து, ஜனவரியில் மூன்றாம் பருவ பாடங்கள் துவங்க உள்ள நிலையில், அதற்குரிய நோட்ஸ்களும், விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது. இவற்றின் விலை, 60 முதல், 100 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை, ஒரு பாட நோட்ஸ் விலை, 45 முதல், 75 ரூபாய் என, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, 200 முதல், 375 ரூபாய் வரை, பெற்றோர் செலவு செய்து வந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், மூன்று பருவ நோட்ஸ்களுக்கு, 500 முதல், 950 ரூபாய் வரை, செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முப்பருவ முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் நிறுவனங்கள் காட்டில் பண மழை பொழிந்து வருவது, பெற்றோர், மாணவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.