>>>பி.எட்., படிப்புக்கு தாவுகின்றனர் மாணவர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் இல்லை

கடினமான பாடத் திட்டம், குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பி.எட்., படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். டிப்ளமாவில் சேர ஆள் இல்லாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பாட வாரியாக, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். கடின பாட திட்டம் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, பிளஸ் 2 முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு முடிப்பவர்கள், மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, பி.எட்., முடித்தவர்கள், டி.ஆர்.பி., நேரடித்தேர்வு மூலம் நியமனம் செய்யப் படுகின்றனர்.இரண்டாண்டுக்கு முன், ஆசிரியர் கல்வி டிப்ளமாவுக்கான பாடத் திட்டங்களை, மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மாற்றி அமைத்தது. பாடத்திட்டம் மிக கடினமாக அமைக்கப்பட்டதால், தேர்வு எழுதுபவர்களில், 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தேர்ச்சி பெற முடியாமல் போனது. துணைத் தேர்வும் நடத்தப்படாததால், அடுத்த ஆண்டு வரை, தேர்வுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. அதேசமயம், அரசு துவக்கப் பள்ளிகளில், ஆண்டுக்காண்டு சரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் குறைத்துக் கொண்டே வருகிறது.
மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்தாலும், தற்போது வரை படித்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கே, அரசுப்பணி கிடைக்க, 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிடும். இதனால், ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்தால், அரசுப் பணி கிடைப்பது அரிது என்ற, நிலை உருவாகிவிட்டது. இதனால், ஆண்டுக்காண்டு, ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. பி.எட்.,டுக்கு மவுசு அதுமட்டுமின்றி, பி.எட்., படித்தவர்களுக்கு, தனியார் பள்ளிகளிலும் அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், ஆசிரியராக விரும்பும் அனைவரும், பி.எட்., படிப்பில் சேரவே விரும்புகின்றனர்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பாதியாக குறைத்துக் கொண்டாலும், பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆள் வருவதில்லை. இதனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "கஷ்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளிலும், பி.எட்., படித்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், அனைவரும், பி.எட்., படிப்பில் சேருகின்றனர்' என, தெரிவித்தனர்.