>>>தத்துவம் படித்தால் எதிர்காலம் உண்டா?

நிஜம், இருப்பு, மதிப்பீடுகள், அறிவு, காரணம், மனம் மற்றும் மொழி ஆகியவைத் தொடர்பான பொது மற்றும் அடிப்படை சிக்கல்கள் குறித்து ஆராய்வதே தத்துவம் என்று ஒரு விளக்கம் தரப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே, எத்தனை பேர் தத்துவம் படிக்கிறார்கள் மற்றும் எத்தனை கல்லூரிகள் தத்துவப் பாடத்தை கற்பிக்கின்றன.
சிலர் தொழில்முறையாக தத்துவத்தைப் படிக்கிறார்கள். கல்வித்துறை அல்லது தனிப்பட்ட மேலாண்மை ஆகிய நோக்கங்களில் அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அதேசமயம், சொந்த விருப்பம் மற்றும் ஆர்வத்தின் பொருட்டு, தத்துவத்தைப் படிக்கும் ஒரு கூட்டம் உண்டு. தொழில்முறையாக தத்துவம் படிப்பவர்களைவிட, ஆர்வத்தின் பேரில் அதை படிப்பவர்கள் சாதிப்பது அதிகம்.
இன்றைய நிலையில், தத்துவப் படிப்பு என்பது எந்தளவிற்கு ஒருவருக்கு நடைமுறை வாழ்வில் உதவுகிறது என்ற ஒரு பெரிய கேள்வி எழுகிறது. இப்பாடப்பிரிவில் போதிய மாணவர்கள் சேர்கிறார்களா? அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறதா?
இத்தகைய விஷயங்களை அலசுவதே நாம் இங்கே அலச வேண்டியுள்ளது.
பொதுவான நிலை
தத்துவப் பாடத்தை விரும்பி படிக்கும் மாணவர்கள், பொதுவாக, கருத்து வளம், வெளிப்படுத்தும் திறன் மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றில் திறமையாளவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிலர், பட்டப்படிப்பை முடித்தப் பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு அல்லது மாநில அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதுவார்கள். சிலர், தத்துவப் பாடத்தில் முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு, எம்.பில் மற்றும் பி.எச்டி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆசிரியர் தொழிலுக்கு சென்று விடுவர்.
தேசிய அளவில், குறைந்தளவிலான கல்லூரிகளும், பல்கலைகளும் மட்டுமே, தத்துவப் படிப்பை வழங்கி வருகின்றன. இது ஒரு பெரிய குறையாக இருந்தாலும், இத்துறையிலும் பலவிதமான வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவரின் திறனைப் பொறுத்து அவர் அடையும் உயரம் அதிகம்.
தத்துவமானது, ஒருவருக்கு, நுணுக்கமான மற்றும் கற்பனாவாத சிந்தனையை வழங்குவதோடு, நல்வாழ்க்கை வாழ்வதற்கான நல்லறிவை தந்து, அதன்மூலம் சமூகத்திற்கும் நன்மை கிடைக்க வழியேற்படுகிறது. இத்துறையில், தொழில்ரீதியான எதிர்காலம் என்ன இருக்கிறது என்ற உறுதி இருந்தால்தான், அதிக மாணவர்களை இத்துறை நோக்கி ஈர்க்க முடியும் என்பது ஒரு நடைமுறை உண்மையே.
பாடத்திட்ட மாற்றம்
ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், தத்துவம் என்பது ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்களே தவிர, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் அறிவில் தத்துவத்தை அறிமுகப்படுத்துவதால், அவர்களின் சிந்தனைகள் பயனுள்ள வகையில் செழுமையடையும்.
இந்தியாவில், ஒரு சில ஐஐடி கல்வி நிறுவனங்கள், தத்துவ துறையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பிற வாய்ப்புகள்
தத்துவம் படித்த ஒருவர், ஆசிரியர் தொழிலுக்குத்தான் சென்றாக வேண்டும் என்றில்லை. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதலாம் அல்லது மனிதவளத் துறை போன்ற சிறப்பு பிரிவுகளில், வணிக மேலாண்மையிலும் ஈடுபடலாம். இதுமட்டுமின்றி, ஜர்னலிசம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் போன்ற துறைகளிலும் ஈடுபடலாம். ஏனெனில், இத்துறைகளில், வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை கிரகிக்கும் தன்மை, பகுப்பாய்வு திறன் போன்றவை தேவைப்படுகிறது.
தத்துவப் படிப்பிற்கான பெரிய வாய்ப்புகள் இந்நாட்டில் இல்லைதான். ஆனால், பேராசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் பெல்லோஷிப் தொகைகள் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளன. தத்துவத் துறை பணி என்பது, பணத்திற்கு அப்பாற்பட்டு, உள்ளார்ந்த தேடல் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்று என்பதை மறந்துவிடலாகாது.
வரப்பிரசாதம்!
பகுப்பாய்வு, விவாதங்கள், சமூக, அரசியல் மற்றும் மதம் தொடர்பான சிக்கல்களை விரிவாக புரிந்து கொள்ளுதல், பிரபஞ்ச தோற்றம், இயக்கம் மற்றும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வு ஆகியவற்றை தர்க்க ரீதியாக புரிந்து கொள்ளுதல், படைப்பின் நோக்கம், உலகத்தின் தொடர் இயக்கப் போராட்டம், ஆதாரம் இல்லாத வரலாறுகளை தர்க்க ரீதியாக அலசுதல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, தத்துவப் பாடம் ஒரு வரப்பிரசாதம்.
மாபெரும் கொடை!
ஒருவருக்கு தத்துவத்தை உருவாக்கும் திறன் இருப்பதானது, இயற்கையின் மாபெரும் கொடை. தத்துவம் என்பது அனைத்தினும் மேன்மையானது. பிரபஞ்ச இயக்கவியலின் அடிப்படை, கணிதமாக இருந்தாலும், தத்துவமானது, அந்த கணிதத்தையும் வரையறுத்துக் கூறும் ஒரு கருவியாக உள்ளது.
விஞ்ஞான ஆய்வுகளுக்கு அடிப்படையாக தத்துவ ஆய்வுகள் உள்ளன. உலகம் எந்தளவிற்கு பழமையானதோ, அதே அளவிற்கு தத்துவமும் பழமையானது. ஏதோ, இன்றைக்கு, இந்த உலகமானது, பொருள் உற்பத்தி, சுரண்டல், முதலாளியம் என்ற நிலைப்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பதற்காக, தத்துவம் வீண் என்று பொருளில்லை. மேற்கூறிய அம்சங்களும் தத்துவத்திற்கு உட்பட்டே நடைபெறுகின்றன. உலகின் இயக்க அம்சங்கள் ஒவ்வொன்றும் தத்துவத்திற்குள் அடக்கம்.
படைப்பாக்க தத்துவத் திறனும், தத்துவ ஆர்வமும் உள்ள ஒருவர், சாதாரண வேலை வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவர் தனது முயற்சிகளின் மூலமாகவே பிரபலமடையலாம். புத்தகங்கள் எழுதுதல், பிரசங்கம் நிகழ்த்துதல் போன்ற பல வாய்ப்புகள் உள்ளன.
ஒருவர், தத்துவப் பட்டப் படிப்புகளை முடிக்கையில், அவருக்கு உலக தத்துவங்களைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் கிடைக்கிறது. அதன் ஆழம் புரிகிறது. இதன்மூலம், தனது தத்துவப் பயணத்தை எவ்வாறு துவக்கலாம் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். எனவே, தத்துவப் படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
கண்டனத்துக்குரியது
ஒட்டுமொத்த வாழ்வின் அடிப்படையாக விளங்கும் தத்துவப் பாடத்திற்கு மாணவர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களை தீட்டாமல், கல்லூரி மற்றும் பல்கலைகளில், அத்துறைகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தாமல், இருக்கும் துறைகளுக்கும் மூடுவிழா நடத்தும் அரசின் செயல் கண்டனத்துக்குரியது என்று பல கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
குறைந்தபட்சம், மேலே சொன்னதுபோல், பல பாடப்பிரிவுகளில், தத்துவத்தை ஒரு அம்சமாக சேர்க்கலாம். நமது தலைமுறைகள், தத்தவத்தின் அறிமுகமே இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது அல்லவா!