>>>டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் வ்ழக்கு: விசாரணை தீவிரம்

டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் வெளியான வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முறைகேடாக வெளியான வினாத்தாளை பயன்படுத்தி, தேர்வு எழுதியவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில், கடந்த மாதம், 12ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கு முன், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது; இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வுக்கு முன், வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், இதுவரை, ஒரு பெண் உட்பட, 24 பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, சென்னையைச் சேர்ந்த பாலனிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜனிடம் இருந்து வினாத்தாள் வாங்கியதாக தெரிவித்தார்.
தியாகராஜன் கொடுத்த தகவலை அடுத்து, விசாகப்பட்டினம் சென்ற போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராவை கைது செய்தனர். ஆனந்தராவை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்தில், ஷூ மார்ட் வைத்து நடத்தி வரும் கக்கூன் என்பவர் பெயரை கூறியதால், கக்கூனை கைது செய்ய, புவனேஸ்வர் செல்ல போலீசார் முடிவு எடுத்திருந்தனர்.
ஆனாலும், முக்கிய குற்றவாளியை, தனிப்படை போலீசார் கண்டறிய முடியாமல் திணறினர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, நேற்று முன்தினம், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் கூறியதாவது: வினாத்தாள் வெளியான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. முன்கூட்டியே வெளியான வினாத்தாளை பயன்படுத்தி, எத்தனை பேர் தேர்வு எழுதினர் என்பது குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்படும்.
அப்போது தான், எத்தனை தேர்வர்கள் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என்பது பற்றி தெரிய வரும். டி.என்.பி.எஸ்.சி., ஆய்வுக்குப் பின், முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், நவ., 4ம் தேதி நடக்கும் மறு தேர்வில், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுமதி மறுப்பது, வேறு வகையான தண்டனைகள் எவை என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.