>>>வெறும் பொழுதுபோக்கா சுற்றுலா: இன்று உலக சுற்றுலா தினம்

 
சுற்றுலா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கொண்டாட்டம் தான். சுற்றுலா என்பது, வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் பெருமை, அடையாளம், தனித்தன்மை, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வாயில். இதன் மூலம் உலகை ஒருங்கிணைக்க முடிகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, என்பதை விவரிக்கும் விதத்திலும், செப்., 27ம் தேதி, உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. எரிசக்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது இந்தாண்டின் மையக்கருத்து. இதன்படி, மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், பசுமை போன்ற நோக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஒரே இடத்தில் வசிப்பவர்கள், அங்கு இருந்து புதியதொரு இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. சுற்றுலாக்களில் கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகை உண்டு. 

மீண்டும் ஸ்பெயின்:2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 98 கோடியே 30 லட்சம் பேர் சர்வதேச சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, இது 4.6 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2010, 2011ம் ஆண்டுகளில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை, பிரான்ஸ் பெற்றுள்ளது. 7 கோடியே 95 லட்சம் பேர் பிரான்சுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்கு அடுத்த 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இத்தாலி உள்ளன. 2011 கணக்கின் படி, 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
உலகின் விருப்பம் எது: தனியார் நிறுவன கணக்கின் படி, உலகில் அதிக மக்களை ஈர்க்கும் இடமாக லண்டன் விளங்குகிறது. 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்கு 1 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர்.

"டாப் 10 ' எண்ணிக்கை
1. லண்டன் 16 கோடியே 9 லட்சம்
2. பாரீஸ் 16 கோடி
3. பாங்காக் 12 கோடியே 2 லட்சம்
4. சிங்கப்பூர் 11 கோடியே 8 லட்சம்
5. இஸ்தான்புல் 11 கோடியே 6 லட்சம்
6. ஹாங்காங் 11 கோடியே 1 லட்சம்
7. மேட்ரிட் 9 கோடியே 7 லட்சம்
8. துபாய் 8 கோடியே 8 லட்சம்
9. பிராங்பர்ட் 8 கோடியே 1 லட்சம்
10. கோலாலம்பூர் 8 கோடியே 1 லட்சம்