>>>தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

"தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளை, அரசு பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன. கல்வி அறிவை அதிகரிக்க, அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம், கற்கும் பாரதம் போன்றவற்றுடன், மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் மூலம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில், சிறப்பு பள்ளிகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், 17 மாவட்டங்களில், 560 சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்களும், தொழிற்கல்வி ஆசிரியர், எழுத்தர், சமையலர் என, தலா ஒருவரும் உள்ளனர். தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் இப்பள்ளிக்கு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகம் மூலம், மத்திய அரசு நிதி வழங்குகிறது. கடந்த, 2003 - 04ல் துவக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, சிறந்த வரவேற்பு உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களே, ஆசிரியர் மற்றும் பணியாளர்களாக நியமிக்கப்படுவதால், விடுதல் இன்றி குழந்தை சேர்ப்பும், தொடர் கல்வியும் வழங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சிறப்பு பள்ளிகளை இயக்கும், "சுடர்' தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 12 பள்ளிகளை மலைப்பகுதியில் நடத்துகிறோம்; 400 குழந்தைகள் படிக்கின்றனர். இரண்டு அல்லது மூன்றாண்டு இங்கு படித்ததும், பக்கத்தில் உள்ள அரசு மற்றும் பிற பள்ளிகளில் அக் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தை நிறுத்தி விடாமல், அதேநேரம், இங்கு படிக்கும் குழந்தைகள், தொடர் கல்வி பெற, அதே பகுதியில் உயர்நிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். தற்போதுள்ள சிறப்பு பள்ளிகளை, அரசு துவக்கப் பள்ளிகளாக மாற்ற வேண்டும். இப்பகுதியில், மூன்று முதல், 10 கி.மீ.,க்கு அப்பால், பள்ளிகள் உள்ளதால், இவர்கள் தொடர் கல்வி பெற முடியவில்லை. இதுபோன்ற சிறப்பு பள்ளிகளைக் கணக்கிட்டு, இப்பள்ளிகளையே தரம் உயர்த்த வேண்டும் அல்லது அருகில் வேறு உயர்நிலைப்பள்ளிகளை அரசு துவங்கினால், இக்குழந்தைகள் விடுதல் இன்றி கல்வியைத் தொடர வசதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.