>>>ஆதிதிராவிட மாணவர் கல்விக்கட்டணம் : அரசே வழங்க புதிய திட்டம் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் அனைத்து விதமான படிப்புகளுக்கும், அரசே கட்டணங்களை வழங்குவது தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான கல்விக் கட்டணம் முழுவதையும், அரசே ஏற்றுக் கொள்ளும் திட்டம், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலை, அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளுக்கும் உரிய கட்டணங்களை, தமிழக அரசின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செலுத்துகிறது. இந்தக் கல்வியாண்டில் இருந்து, மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கும், இத்திட்டம் பயன்படும். சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டணக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை மட்டும் இவர்கள் செலுத்த வசதியாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இனிவரும் கல்வியாண்டுகளில், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், மற்றும் சுயநிதி கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் பட்டியல் மற்றும் அதற்கான கட்டண விவரங்கள் சேகரிக்கப்படும்.
ஆதிதிராவிடர் நல கமிஷனரிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்று, உரிய கல்லூரிக்கு வழங்கப்படும். மாணவ, மாணவியரின் ஜாதி, வருமானச் சான்றுகளை ஆய்வு செய்து அளிக்க, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் இதில் இணைந்து செயல்படுவர். தவிரவும் முதல் தலைமுறை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையும் இதில் பின்பற்றப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, இரண்டாம் நிலை அலுவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்தல் என்பது உள்ளிட்ட, 18 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.