>>>சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்

தமிழகத்தில் உள்ள 53 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ளது.
சென்னை, கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட, 15 மாவட்டங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, கட்டண நிர்ணயக் குழுவிடம், மேல்முறையீடு செய்தன.
அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், 21 பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கோபாலபுரத்தில் உள்ள, நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கான கட்டணம், 31 ஆயிரத்து, 875 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 35 ஆயிரம் ரூபாய், ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளிக்கான கட்டண விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம், நடப்பு கல்வி ஆண்டுக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.