>>>டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... நீளும் பட்டியல்: தவிக்கும் போலீஸ்

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு தொடர்பாக இதுவரை, 12 பேர் கைதாகியுள்ள நிலையில், மீண்டும் பட்டியல் நீளும் என்பதால், கைது படலம் முடிந்து, விசாரணை எப்போது நிறைவடையும் என போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முனிசிபல் கமிஷனர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 12ம் தேதி, டி.என்.பி.எஸ்.எஸ்.சி., குரூப்- 2 தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஈரோடு, அரூர் மையங்களில், தேர்வுக்கு முன்னாலேயே வினாத்தாள் வெளியானது. இரு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை வைத்து, குரூப்- 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து, 10 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட, சென்னையைச் சேர்ந்த பாலன், வினாத்தாளை தனக்கு, திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜன் கொடுத்ததாக கூறினார். தியாகராஜன், வினாத்தாளை தனக்கு, ஆந்திராவை சேர்ந்த ஆனந்த ராவ் கொடுத்ததாகக் கூறினார். அவரைப் பிடிக்க, தனிப்படை போலீசார், 10 நாளாக, தேடுதல் வேட்டை நடத்தினர்.
விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட ராவ், ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான அவர், சோர்வாக உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் நாளை, போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆந்திராவில் இருந்து அழைத்து வரும்போது, போலீசாரிடம், வினாத்தாள் அச்சான அச்சக ஊழியர் ஒருவர் கொடுத்ததாக, ராவ் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் கைதாகும் ஒவ்வொருவரும், வேறொருவரை கை காண்பிப்பதால், எப்போது விசாரணை நிறைவடையும் என்று தவிக்கும் நிலை, போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. வெளிமாநில ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரையும் கைது செய்ய, பல நாள் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை அலுவலகத்துக்கு வரும் வழியில், வினாத்தாள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளோம். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நீண்ட தூரப்பயணம், மொழிப்பிரச்னை என, பல்வேறு சங்கடங்களை பொருட்படுத்தாமல், தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.