பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களுக்கு
மேலாகியும், மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் சில மாணவர்கள்
பரிதவிக்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே,
சாத்தங்குடி சத்திரிய நாடார்கள் உயர்நிலைப் பள்ளி, சமீபத்தில் தரம்
உயர்த்தப்பட்டது. கடந்த மார்ச்சில் முதன்முறையாக, 42 மாணவர்கள், பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதி, 39 பேர் தேர்ச்சி பெற்றனர். அனு, முத்துக்குமார்,
சுபாஷ்கரனுக்கு மட்டும், தேர்வு முடிவு வரவில்லை.
பள்ளியிலும், அதிகாரிகளிடமும் பெற்றோர் முறையிட்டனர். அதற்கு, ஜூன்
22ல், தேர்வு முடிவுடன், மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் என்றனர்; அன்றும்,
மதிப்பெண் பட்டியல் வரவில்லை. மீண்டும், சென்னை அரசு தேர்வுத் துறை
இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, 39 பேருக்கு மட்டுமே
போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் கிடைத்தது; மூன்று மாணவர்களுக்கு,
அப்போதும் மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை.
அதிகாரிகளிடம் வலியுறுத்தியதால், மூவரும் தேர்ச்சி என தெரிவித்து,
மதிப்பெண்ணை குறித்துக் கொள்ளும்படி கூறினர். அதிகாரப்பூர்வ மதிப்பெண்
சான்று தரவில்லை. அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அம்மாணவர்கள், மதிப்பெண்
பட்டியல் இல்லாமலேயே, திருமங்கலம் அரசு, தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர்.
மூன்று மாதம் கடந்த நிலையில், கல்வித் துறை அதிகாரிகள் மூலம் தேர்வுத்
துறை இயக்குனரகத்திற்கு தெரிவிக்கப்பட்டும், தேர்வு முடிவும்
அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை; மதிப்பெண் பட்டியலும் கிடைத்தபாடில்லை.
எனவே, பிளஸ் 1 வகுப்பில் அனுமதித்த பள்ளிகள், மாணவர்களை வெளியே அனுப்பி
விட்டனர்; அதிகாரிகள் சமாதானம் செய்து, மீண்டும், பள்ளியில் மாணவர்களை
சேர்த்துள்ளனர்.
தேர்வுத் துறை மெத்தனத்தால் மாணவர்கள், திரிசங்கு நிலையில் தத்தளிக்கின்றனர்; பெற்றோருக்கும் நிம்மதி இல்லை.