>>>பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு

ஆதி திராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2012- 13ம் ஆண்டு முதலே இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் கல்வி உதவித்தொகை பெறும் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.  மேலும், நரிக்குறவர் என்ற குருவிக்காரர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.