>>>உதவித்தொகை இன்றி தவிக்கும் நர்சிங் மாணவிகள்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் டிப்ளமோ நர்சிங் மாணவிகள், 500 பேருக்கு, கடந்த ஐந்து மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில், மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்சிங் பிரிவில், 500 பேர் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் இந்த மாணவியருக்கு, தலா, 400 ரூபாய் வீதம், மாதந்தோறும் உதவித்தொகை, நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பணத்தை, மெஸ் செலவுக்காக மாணவியர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால், கடந்த ஐந்து மாதமாக, உதவித்தொகை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி இளநிலை நிர்வாக அலுவலர் தேன்மொழி, "வங்கிக் கணக்கு துவங்கும் மாணவியருக்கு மட்டுமே, அவர்களது கணக்கில், உதவித்தொகை செலுத்தப்படும்" என்று கெடுபிடி செய்து வருவதாக, மாணவியர் கூறுகின்றனர்.
வங்கிக் கணக்கு துவங்க, 500 ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டும் என்பதால், உதவித்தொகையை நேரடியாக வழங்கும்படி முறையிட்டும், மறுப்பதாக மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்னை, கல்லூரி முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், வழக்கம் போல, உதவித்தொகையை வழங்கும்படி அறிவுறுத்தியும், இளநிலை நிர்வாக அலுவலர், அடம் பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ஐந்து மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் மாணவியர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் முஸ்தபா கூறியதாவது: அரசு உத்தரவுப்படி, கருவூலத்தில் இருந்து நேரடியாக, இ.சி.எஸ்., முறையில், வங்கிக் கணக்கு மூலம், மாணவியர், உதவித்தொகையை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலமுறை அறிவுறுத்தியும், வங்கியில் கணக்கு துவங்காமல், மாணவியர் பிடிவாதம் செய்கின்றனர்.
உதவித்தொகை வழங்குவதில், முறைகேடு நடப்பதை தவிர்க்கவே, இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில், இளநிலை நிர்வாக அலுவலர் மீது பழி சுமத்துவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.