>>>அரசு கலை கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசு கலை கல்லூரிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால், ஏற்கனவே உள்ள பட்டப் படிப்புகளுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாததால், வகுப்புகள் நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 51 அரசு கலை கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை, ஆய்வு படிப்புகள் என, 299 புதிய பட்டப் படிப்புகளும், பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டுள்ளன. தற்போது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள காலி இடங்கள் என, காலை நேர கல்லூரிகளில், 1,623 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை, கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப, ஜூலை மாதம், முதல்வர் உத்தரவிட்டார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப காலமாகும் என்பதால், தற்காலிகமாக, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பவும், அவர்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் எனவும் அறிவித்தார். இந்நிலையில், அரசு உத்தரவிட்டு இரு மாதங்களாகியும், இதுவரை கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளை எடுக்க, பேராசிரியர் இல்லாத நிலை நிலவுகிறது. இந்த படிப்புகளுக்கு, ஏற்கனவே இருக்கும் பேராசிரியர்களை கொண்டு பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால், புதிய பட்டப் படிப்புகளிலும் கவனம் செலுத்த முடியாமல், தங்களுடைய பாடப்பிரிவிலும், போதிய நேரம் மாணவர்களிடம் செலவிட முடியாத நிலை பேராசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலர் பிரதாபன் கூறியதாவது: ஊரகப் பகுதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்கு இடமாறுதல் கேட்டு சென்று விடுகின்றனர். இதனால், பேராசிரியர் பற்றாக்குறை கிராமப்புறங்களில் அதிகளவில் உள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தஞ்சாவூர், கும்பகோணம், குடியாத்தம், வாலாஜா, செய்யாறு, திண்டிவனம் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் போதிய அளவு பேராசிரியர்கள் இல்லை. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, கும்பகோணம் ஆடவர், பெண்கள் மகளிர் கல்லூரியில் தலா, 60 இடங்கள் காலியாக உள்ளன.
வாலாஜா, குடியாத்தம் அரசு கல்லூரிகளில் தலா, 40 இடங்கள் காலியாக உள்ளன. நவம்பர் மாதத்தில், பருவ தேர்வுகள் வரவுள்ளதால், அதற்குள் இப்பணியிடங்களை நிரப்பினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.