பாரதிதாசன் பல்கலைக்கு, நாக் கமிட்டி தரநிர்ணய மறுமதிப்பீட்டில்,
மீண்டும் ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இதுகுறித்து திருச்சி
பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூருவில் உள்ள தேசிய தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமத்தின் (நாக்
கமிட்டி) சார்பாக, இந்தியாவின் தலைச்சிறந்த கல்வியாளர்கள் அடங்கிய, எட்டு
பேர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த, 3,4,5ம் தேதிகளில், திருச்சி பாரதிதாசன்
பல்கலை வந்து, இங்குள்ள அனைத்துத்துறைகளையும் பார்வையிட்டது. பாரதிதாசன்
பல்கலை ஏற்கனவே சமர்ப்பித்திருந்த சுயபரிசீலனை அறிக்கையை அடிப்படையாக
கொண்டு, குழு ஆய்வு மேற்கொண்டது.
அதனடிப்படையில் இக்குழு, தனது அறிக்கையினை "நாக்" கமிட்டியிடம்
ஒப்படைத்தது. 15ம் தேதி, "நாக்" நிர்வாகக் குழுக் கூட்டத்தில்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு அதிகபட்ச அந்தஸ்தான ஏ-கிரேடு
வழங்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலை பெற்றிருந்த "ஏ" கிரேடு அந்தஸ்தை, மீண்டும் மறுமதிப்பீட்டில் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
தரச்சான்று கிடைக்க ஒத்துழைப்பு நல்கிய பேராசிரியர்கள், அலுவலகப்
பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும், தனது
மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக துணைவேந்தர்
மீனா குறிப்பிட்டுள்ளார்.