அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக,
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர்,
மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை.
மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன.
குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி,
ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின்
கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2
அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று
விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும்
பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30
விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு
பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில்
தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள
ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், "தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள்
நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள்
விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி
ஆசிரியர்கள் பணியாற்றுவர்,''என்றார்."