>>>உயர் வருமான பதவிகள் நிரம்பின: குரூப் - 2 கலந்தாய்வில் ருசிகரம்

குரூப் - 2 பணி ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கிய, முதல் இரண்டு நாளிலேயே, சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, "பசை'யுள்ள பதவிகள் நிரம்பின.குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்ற, 6,949 பேரில், 3,472 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு, நேற்று முன்தினம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது.குரூப் - 2 நிலையில், அரசின் பல்வேறு துறைகளில், பல்வேறு பணிகள் இருந்தாலும், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், வணிக வரித்துறையில், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட சில வகை பணியிடங்களே, "டாப்'பில் இருக்கின்றன. இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், இதைப் பிடிப்பதற்குத் தான், தேர்வர் மத்தியில், கடும் போட்டி நிலவுகிறது. கலந்தாய்வு துவங்கிய முதல் நாளில், 640 பேர் அழைக்கப்பட்டனர்; ஒன்பது பேர் வரவில்லை.சார்பதிவாளர் பதவியில், ஏழு இடங்களும், நகராட்சி கமிஷனர் பதவியில், ஐந்து இடங்களும், முதல் நாளே நிரம்பின. முதல், 10 இடங்களைப் பிடித்தவர்கள், இந்த பதவிகளை அள்ளிச் சென்றனர். உதவி வணிக வரி அலுவலர் பதவிகளும், நேற்று முன்தினம் கணிசமாக நிரம்பின. மொத்தத்தில், முதல் நாள், 605 பேர், பணி ஒதுக்கீடு பெற்றனர். இரண்டாம் நாளான நேற்றும், 640 பேர் அழைக்கப்பட்டனர்; 18 பேர் வரவில்லை. மீதம் இருந்தவர்களில், 526 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இரு நாளும் சேர்த்து, 1,131 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இவர்களால், 125 உதவி வணிகவரி அலுவலர் பணியிடங்கள், 281 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் மற்றும் நிதித்துறையில், 44, உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் ஆகிய அனைத்தும் நிரம்பி விட்டன. பசை நிறைந்த பதவிகள், இரண்டே நாளில் நிரம்பியதைக் கண்டு, தேர்வாணைய வட்டாரம், வியப்பில் ஆழ்ந்தது. "கலந்தாய்விற்கு வராமல், தேர்வர், "ஆப்சென்ட்' ஆனால், அடுத்த நாளில் கலந்து கொள்ளலாம்; ஆனால், முதல் நாள் சீனியாரிட்டியை கேட்க முடியாது. கலந்தாய்விற்கு வரும் நாளன்று, முதலில் அழைக்கப்பட்டு, அவருக்குரிய பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்' என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன