>>>சிறுபான்மை பள்ளிகளில் உரிமை மீறல்கள் அதிகம் : தேசிய ஆணைய குழுவிடம் புகார்

"தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிக உரிமை மீறல்கள் நடக்கின்றன' என, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம், புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் சார்பில், சென்னையில் நேற்று நடந்த விசாரணையின் போது, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர், "தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிகளவிற்கு, குழந்தை உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன' என்றார். ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா கூறுகையில், ""தனியார் பள்ளியோ, சிறுபான்மை பள்ளியோ... எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், அங்கு, எத்தகைய குழந்தை உரிமை மீறல் நடந்தாலும், அதற்கு, கல்வித் துறைக்கும், மாநில அரசுக்கும் முழு பொறுப்பு உண்டு. அவர்கள் தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின்படி, சம்பந்தபட்ட ஆசிரியரை, பணியில் இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதுடன், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சமீபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், போதிய அளவிற்கு இல்லை என, ஆணைய தலைவரிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ""ஆறு மாதங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?'' என, சாந்தா சின்கா கேள்வி எழுப்பினார். இதற்கு, பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறுகையில், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களுக்குள், முழுமையான அளவில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.