>>>மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் - பள்ளிகளிடம் வசூல் புகார்

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க பள்ளிகளிடம் கட்டணம் வசூல் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த பொருட்களை வழங்க பள்ளிகளிடமிருந்து  கெடுபிடி வசூல் செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் உட்பட ஒரு சில தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்குகின்ற விலையில்லா பொருட்களான புத்தகம், குறிப்பேடு மற்றும் சீருடை போன்றவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வினியோகம் செய்த போது இரு பருவங்களுக்கும் சேர்த்து துவக்கப் பள்ளிக்கு 300 ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு 500 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விலையில்லா பொருட்கள் வினியோகத்ற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கியுள்ள நிலையில் சில அதிகாரிகள் ஆசிரியர்களிடம் கெடுபிடி வசூல் செய்து வருவது கண்டிக்கதக்கது. எனவே, அரசின் விலையில்லா பொருட்களை வழங்க கட்டாய வசூல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.