>>>கலைமகளே வருக! கல்வி வளம் தருக!

 
நல்லதை பேசச்செய் நாமகளே!சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் இதைப் பாராயணம் செய்தால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்
*கலைமகளே! வெண்பளிங்கு நிறத்தவளே! ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருள்பவளே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! நல்லறிவினை வழங்க என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருள்வாயாக.
* வேதம் நான்கிற்கும் வித்தகியே! பூரணநிலவாக பிரகாசிப்பவளே! குளிர்ச்சி மிக்க முத்துமாலைகளை அணிந்திருப்பவளே! அறிவுடைய சான்றோர்களால் துதிக்கப்படுபவளே! உன்னையல்லால் எனக்கு வேறு கதி யாருமில்லை.
* பூமி, சுவர்க்கம், பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் ஆள்பவளே! கலைகளின் நாயகியே! நான்கு திருமுகங்களால் வேதம் ஓதும் பிரம்மதேவனின் துணைவியே! மயில் போன்ற சாயலைக் கொண்டவளே! எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை அருள்வாயாக.
* அறியாமை என்னும் இருளைப் போக்குபவளே! ஒப்பற்ற வீணையை கையில் ஏந்தி இசைப்பவளே! வேதங்களின் முடிவுப்பொருளாகத் திகழ்பவளே! மலர்க்கொடி போன்ற மென்மை மிக்கவளே! எப்போதும் என் நாவில் அமர்ந்து நல்லவற்றைப் பேச வைப்பாயாக.
* குயில்போல இனிய மொழியாளே! அன்னம் போல நடை பயில்பவளே! இளம் பெண்மானாக இருப்பவளே! திருவடியில் பணிந்தவர்க்கு கலைஞானம் தருபவளே! சகலகலாவல்லியே! கலையரசியே! ஞானமும், நல்லறிவும் எனக்கு அளித்து வாழ்வை வளம் பெறச் செய்வாயாக.
* பாவலர் போற்றும் நாமகளே! கலைஞர்கள் வணங்கும் கலைமகளே!  மாணவர் வழிபடும் சரஸ்வதியே! வேத நாயகியே! அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து அறிவை துலங்கச் செய்பவளே! கல்விக்குரிய இந்நன்னாளில் வணங்குவோருக்கு தூய்மையான உள்ளத்தையும், அழியாத புகழையும் என்றென்றும் தந்தருள்வாயாக.
பூமிக்கடியில் ஓடும் சரஸ்வதி நதி:
பிறகு தோன்றியவள் சரஸ்வதி. இவளை "கவுரி' என்றும் அழைப்பர். வெண்மை நிறத்துடன், தாமரைப்பூவில் காட்சி தரும் இவள் எட்டு கருவிகளை வைத்திருக்கிறாள். நிலாவைப் போல பிரகாசமான ஒளியை உடையவள். இவள் நமது நாட்டில் நதியாக ஓடுகிறாள்.ரிக் வேதத்தில் இந்த நதி பற்றிய தகவல் உள்ளது. "சரஸ்' என்றால் "தண்ணீர்'. ஒரு காலத்தில் இந்தநதியின் கரையில் பல யாகங்கள் செய்யப்பட்டுள்ளது. வாக்கிற்கு அதிபதியான சரஸ்வதிக்கு "வாக்தேவி' என்றும் பெயர் உண்டு. இதன் அடிப்படையில் இந்த நதிக்கு "வாக்தேவதை நதி' என்று பெயரும் உண்டானது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் திரிவேணியில் சங்கமிக்கின்றன. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. திரி@வணியில் கங்கை, யமுனை ஆகிய நதிகள் சங்கமிப்பதை காணமுடியும். ஆனால், சரஸ்வதி நதி பூமிக்கடியில் ஓடுவதாக ஐதீகம் உள்ளதால்  அதைக் காண முடியாது.

அன்புள்ள கோபாலசுந்தரி:
ஆதிசங்கரர் எழுதிய அம்பிகை துதிகளில் மந்திரநூலாகத் திகழ்வது சவுந்தர்யலஹரி. நூறு ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல் அம்பிகையின் மேன்மையைப் போற்றுகிறது. இதற்குரிய விளக்கவுரையைப் பல மகான்கள் எழுதியுள்ளனர். ஆனந்தகிரி என்பவர் எழுதிய விளக்கவுரைக்கு "கோபால சுந்தரி' என்று பெயர். சவுந்தர்யலஹரி அம்பிகையை மட்டுமில்லாமல், அவளது சகோதரரான விஷ்ணுவையும் போற்றுவதாக இவர் விளக்கம் தருகிறார். அண்ணனின் பெயரான கோபால், தங்கையின் பெயரான சுந்தரி இரண்டையும் இணைத்து "கோபாலசுந்தரி' என்று தன் உரைநூலுக்கு பெயரும் வைத்திருக்கிறார். சகோதர சகோதரியின் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
பதிபக்தியில் நம்பர்ஒன்:
கணவர் மீது அன்பு கொண்ட பெண்களில் அம்பிகை தான் "நம்பர் ஒன்' என்கிறார் ஆதிசங்கரர். சவுந்தர்யலஹரியில் இதை வெளிப்படுத்தும் விதத்தில் பல ஸ்லோகங்கள் உள்ளன. கணவரான சிவபெருமானின் பெருமையைப் பேசிப் பேசியே அம்பாளின் நாக்கு செம்பருத்திப்பூ போல சிவந்து விட்டது என்று 64வது ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை சரஸ்வதி வீணா கானமாக போற்றுவதைக் கேட்டு அம்பிகை சந்தோஷப் பெருக்கில் திளைக்கிறாள் என்று 66வது ஸ்லோகத்தில் கூறுகிறார். 96வது ஸ்லோகத்தில் ""ஸதீநாம் அசரமே!'' என்றே அம்பிகையைப் போற்றுகிறார். பதிபக்தியில் "நம்பர் ஒன்' அம்பிகை தான் என்பதற்கு இது சான்று.


சகலமும் தரும் சாரதாதேவி:
சிருங்கேரியில் சரஸ்வதிதேவியே சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்முன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதா தேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையாகத் திகழ்கிறாள்.