அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப்
பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில்
வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அரசு கலை, அறிவியல்
கல்லூரிகளில், காலியாக உள்ள, 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை
நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு ஆண்டை
கடந்த நிலையில், இன்னும், உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படவில்லை.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை சார்பில், புதிய
அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதற்குள், பழைய அறிவிப்பை நிறைவேற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, சமீபத்தில், உயர்கல்வித்
துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான
ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., வேகமாக செய்து வருகிறது. இம்மாதம், 20ம்
தேதிக்குப் பின், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியாகலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள்,
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட உள்ளது.
எம்.பில்., மற்றும் "நெட்' அல்லது "ஸ்லெட்' ஆகிய தேர்வுகளில், தகுதியைப்
பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக,
பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும், விண்ணப்பிக்கலாம். கற்பித்தல்
அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், அதிக கல்வித் தகுதி இருந்தால், 9 மதிப்பெண்
மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண்கள்
நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர், இப்பணிக்கு
தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக, 7.5 ஆண்டு
இருந்தால், 15 மதிப்பெண்கள் கிடைக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவித்தன.