>>>மனசாட்சியுடன் பணியாற்ற உறுதியேற்க வேண்டும் : இயக்குனர் அறிவுறுத்தல்

"பள்ளி தலைமையாசிரியர்கள் மனசாட்சியுடன் பணியாற்றி, மாணவர்களின் தேர்ச்சிக்காக உழைக்க வேண்டும்,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்ட இயக்குனர் இளங்கோவன் பேசினார்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், குறைந்த அளவு தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், மதுரை வேலம்மாள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், இளங்கோவன் பேசியதாவது: மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் தலைமையாசிரியர்களின் பங்கு முக்கியம். பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இதில் தோல்வி ஏற்படும் போது மாணவரின் வாழ்க்கை திசைமாறி செல்ல வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் "ரோல் மாடல்'. இதை புரிந்து ஆசிரியர்களின் செயல்பாடு அமைய வேண்டும். இதுவரை உங்களின் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொண்டு, இந்த பயிற்சிக்கு பின்னராவது "மாணவர்களின் முன்னேற்றத்துக்காக நல்ல விஷயம் செய்ய வேண்டும்' என்று, நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். மனசாட்சிப்படி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, பள்ளிகளில் "ரிசல்ட்'டை அதிகரிக்க வேண்டும், என்றார்.