>>>எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க கோரிய மனு தள்ளுபடி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, இடங்களை அதிகரிக்க, புதிதாக அத்தியாவசிய சான்றிதழ் வலியுறுத்தாமல், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிய, தனியார் மருத்துவக் கல்லூரியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, குரோம்பேட்டையில், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100ல் இருந்து, 150 இடங்களாக அதிகரிக்கக் கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பிக்க, அத்யாவசிய சான்றிதழ் கேட்டு, தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. அரசும், 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், அத்யாவசிய சான்றிதழ் வழங்கியது. இதன்பின், மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. கல்லூரியை, மருத்துவக் கவுன்சில் ஆய்வு செய்து, சில குறைகளை சுட்டிக்காட்டியது. பின், அந்த விண்ணப்பத்தை, கல்லூரி தரப்பில் வலியுறுத்தவில்லை. 2010ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், மருத்துவக் கவுன்சிலுக்கு, மீண்டும் விண்ணப்பித்தது. புதிதாக, அத்யாவசிய சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை, என, நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "புதிதாக, அத்யாவசிய சான்றிதழ் தேவை, என, வலியுறுத்தாமல், இடங்களை அதிகரிக்கக் கோரிய, விண்ணப்பத்தை பரிசீலிக்க, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: புதிய அத்யாவசிய சான்றிதழ் அல்லது மூன்று ஆண்டு காலாவதிக்குப் பின், புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ், தாக்கல் செய்ய வேண்டும், என, இந்திய மருத்துவக் கவுன்சில், முடிவெடுத்துள்ளது. தற்போது இடங்களை அதிகப்படுத்துவது தேவைதானா, கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா, என்பதை பார்ப்பதற்காக தான், இந்தச் சான்றிதழ் கோரப்படுகிறது. மருத்துவக் கவுன்சில் முடிவானது, சட்ட விதிகளுக்கு முரணாக இல்லை. எனவே, கவுன்சில் உத்தரவில், எந்த சட்டவிரோதமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.