>>>"சரியான திசையில், சரியான வேகத்தில் சென்றால் வெற்றி"- மயில்சாமி அண்ணாதுரை

"சரியான திசையில், சரியாக வேகத்தில், சரியான நேரத்தில் சென்றால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்" என, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
திருப்பூர், பள்ளியில், சூரிய சக்தி மின் உற்பத்தி பிரிவை துவக்கி வைத்து, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஒருவர் சிறப்பாக செயல்பட்டால், அவரை தாராளமாக பாராட்ட வேண்டும்; தவறு செய்தால், கனிவாக சுட்டிக் காட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டியில், ஒருவர் தான் கோப்பை வெல்ல முடியும். ஆனால் பள்ளி தேர்வில் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும்.
நான்கு லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை அடைய, சந்திராயனை வினாடிக்கு ஒரு கி.மீ., வேகத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டும்; சரியான திசை, சரியான வேகம், சரியாக நேரத்தில் சென்றதால்தான் அது நிலவை அடைய முடிந்தது. அதுபோல் நமது குறிக்கோளை அடைய, சரியான நேரத்தையும், சரியான வேகத்தையும் பயன்படுத்த வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பங்கள் இளைய தலைமுறைக்கு நிறையவே உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும். சரியான பதில்களை பெற, சரியான கேள்விகளை கேட்க தெரிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் அந்த கேள்விகள், வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.