மாநகராட்சி பள்ளிகளில், இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள, படிப்பில்
மந்தமாக உள்ள, மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த, மாநகராட்சி முடிவு
செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதவுள்ள, 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.மேலும்,
இந்த ஆண்டு, அதிக மதிப்பெண் பெறும் 110 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,
அவர்கள் மாநில அளவில் சாதிக்கும் வகையில், பிரத்யேக ஆசிரியர்களை வைத்து
சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், மாநகராட்சி
பள்ளிகள், இந்த ஆண்டு, 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை எட்டுவதற்காக, புதிய
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த,
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய, துணை
தாசில்தார் பாலாஜி, சென்னை மாநகராட்சி பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை
மேம்படுத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம்,
ரிப்பன் மாளிகையில் நடந்தது. இன்னும் 10 நாட்களில், கவன குறைவுள்ள, கல்வித்
திறனில் பின்தங்கி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, சிறப்பு
முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கல்வி அதிகாரிகள்
தெரிவித்தனர். கடந்த ஆண்டு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், 84.8 சதவீதமும்,
10ம் வகுப்பு தேர்வில், 86.9 சதவீதமும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.