சமச்சீர் கல்வியில், இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாடப் புத்தகம்,
எழுத்துப் பிழைகளுடன் வினியோகிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும்
பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு முதல், சமச்சீர்
கல்வித் திட்டம் அறிமுகமானது. இந்த ஆண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
காலாண்டுத் தேர்வு முடிந்து, இம்மாதம், 4ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன;
தற்போது, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்றன. இதில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப்
புத்தகத்தில், "குடியரசு' என்னும் தலைப்பிலான இரண்டாவது பாடத்தில்,
மூன்றாவது கேள்வியில், "உன் வகுப்பறைக்கான விதிமுறைகளை ஆசிரியரும்,
மாணவர்களும் சேர்ந்து உருவாக்கவும்' என்பதில், "மாணவர்' என்ற வார்த்தை,
"மானவர்' என, பிழையாக அச்சாகியுள்ளது. இதே பாடப் புத்தகத்தில், "வேத காலம்'
என்னும் தலைப்பிலான நான்காவது பாடத்தில், மூன்றாவது கேள்வியில், "வேத
காலத்தில் பெண்களின் நிலை, தற்காலத்தில் பெண்களின் நிலை
ஒப்புமைப்படுத்துக்க' என உள்ளது; "ஒப்புமைப்படுத்துக' என்பதே சரியானது.
எழுத்துப்பிழைகளுடன் சமூக அறிவியல் பாடப் புத்தகம், மாணவர்களுக்கு
வினியோகிக்கப்பட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.