>>>மத்திய அரசுக்கு இணையான சம்பளம் : போராட்டத்தில் ஆசிரியர் கூட்டணி

"ஆறாவது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கும் வரை, தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில தலைவர் காமராஜ் கூறினார்.
அவர் கூறியதாவது: ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வழங்கிய ஊதியத்திற்கு இணையாக, தமிழகத்திலும் வழங்க வேண்டும். அவர்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்., 15 முதல் நவ., 12 வரை, மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்த உள்ளோம். நவ., 22 ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஜனவரியில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதன்பிறகும் கோரிக்கையை ஏற்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்துவோம். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், இதுவரை பேச்சு நடத்த, தமிழக அரசு அழைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்காததால், 3,000க்கும் மேற்பட்ட "ஓராசிரியர் பள்ளிகள்' செயல்படுகின்றன. மேலும், 2,000 க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர் மட்டுமே உள்ளனர், என்றார்.