>>>ஆசிரியர் நியமனம்: புதிய விதிமுறையில் வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா?

ஆசிரியர் நியமனத்திற்கான, புதிய விதிமுறையில், வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், இறுதி தீர்ப்பு வரும் வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் நடக்கும் என்பது, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வகை ஆசிரியர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றால் போதும்; அதன் பின், தேர்ச்சி பெற்றவர்களில், காலிஇடங்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இன சுழற்சி வாரியாக, பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் இருக்கும்.
கேள்வி
இரு வகை ஆசிரியர் தேர்விலும், வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா என்பதுதான், தேர்வர் முன் இருக்கும் கேள்வி. இணையதளத்தில், பதிவு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட தேர்வர், தேர்வாகி உள்ளாரா, இல்லையா என்பது தெரிய வரும். ஆனால், ஒருவரின் தேர்வு, நியாயமான முறையில் நடந்து இருக்கிறதா என்பதை, மற்றவர் அறிய, தற்போது வழியில்லை. இதனால், வெளிப்படைத்தன்மை, 100 சதவீத அளவிற்கு கடைபிடிக்கப்படுமா என, தேர்வர் மத்தியில், சந்தேகம் இருக்கிறது.தேர்வு பெற்ற ஒருவரின், பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட்., மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, தனித்தனியே பட்டியலிட்டு, அவற்றை, அனைத்து தேர்வர்களும் பார்க்கும் வகையில், வெளிப்படையாக, இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட வேண்டும் என்பது, தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க, 100 சதவீதம், நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரின் தேர்வு முறையை, மற்றவர்தெரிந்து கொள்ள, தற்போது வழியில்லை தான். இதுகுறித்து, ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கென, தனி, "சாப்ட்வேர்' தயாரிக்க, முயன்று வருகிறோம்.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர், பிளஸ் 2 உள்ளிட்ட இதர படிப்புகளில் பெற்ற மதிப்பெண் விவரங் களை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட உள்ளோம்.