>>>பழங்குடியினரை மிரட்டும் ரத்த சோகை நோய்: பொது வினியோகத்தில் வெல்லம் வழங்க முடிவு!

"ரத்த சோகை பாதிப்பில் இருந்து பழங்குடியின மக்களை மீட்க, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என, பழங்குடியினர் நல ஆணையர் தெரிவித்தார்.

பழங்குடியினர் நல ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான, கிறிஸ்துதாஸ் காந்தி, ஊட்டியில், அளித்த சிறப்பு பேட்டி: நீலகிரி மாவட்டத்தில், ஆறு தொல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மேம்பாட்டுக்குரிய திட்டங்களை அவர்களே திட்டமிட்டு கொள்ளும் வகையில், ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி உட்பட மலைப் பிரதேசங்களில், பழங்குடியின கிராமங்களில் வாழும் கர்ப்பிணி பெண்கள், உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சேர முடிவதில்லை; காரணம், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், பிரசவ கால பிரச்னைகளை பழங்குடியின கர்ப்பிணிகள் எதிர்கொள்கின்றனர். சாலை, போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின கர்ப்பிணி பெண்கள், குறித்த நாளுக்கு, ஒரு மாதத்திற்கு முன், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் காப்பகம் அமைத்து, அவர்களை அங்கு தங்க வைத்து, பிரசவ சிகிச்சை அளிக்கலாம். இதற்கான பரிந்துரை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்கள், "சிக்கில் -செல்- அனிமியா' மற்றும் ரத்த சோகையால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெல்லத்தை உண்பது, ரத்த சோகை நோயைக் கட்டுப்படுத்தும் என்பதால், பழங்குடியின மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில், வெல்லம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவ, மாணவியர் இடையே, கல்வி பெறுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், அரசு கல்லூரிகளில், அதிகளவு, மாணவ, மாணவியர் இணைகின்றனர். எனவே, கூடுதலாக, எஸ்.சி., - எஸ்.டி., விடுதிகளை அமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.