>>>அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் எப்படி?

அமெரிக்காவில் ஆராய்ச்சி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான ஆதரவு ஊதியம் மற்றும் உதவித்தொகை தருகின்றனவா? அப்படியிருப்பின், அதற்குரிய தகுதிகள் என்ன?
பதில்: அமெரிக்காவில் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்பது, எந்தத் துறை என்பதைப் பொருத்தும் அந்தத் துறை மேற்கொண்டிருக்கும் நிதி ஆதரவு பெற்ற திட்டங்கள் எத்தனை என்பதைப் பொருத்தும் அமையும். பொதுவாக, ஆராய்ச்சித் திட்டத்தின் தேவை சார்ந்து, அதை வழி நடத்தும் துறைத் தலைவர்கள், ஆய்வு உதவியாளர்களை அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான ஆதரவு ஊதியம் மற்றும் உதவித் தொகை ஆகியவற்றை வழங்குகின்றன. ஆனால், மாணவர்கள் அதற்கு கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு அமெரிக்க-இந்திய அறக்கட்டளையை (USIEF) அணுகலாம். மின்னஞ்சல்: usiefchennai@usief.org.in தொலைபேசி: (044) 2857 4423/4131. இணையதளம்: www.usief.org.in பேஸ்புக்: www.facebook.com/EducationUSA.
கேள்வி: ஒரு இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தப் பணிக்காக அமெரிக்காவுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டு, அந்தப் பணிக் காலம் முடிந்த பிறகு அங்கேயே வேறு வேலையில் சேர்வது சட்டப்பூர்வமானதா? 
பதில்: உங்கள் கேள்விக்கு சரியான பதில் என்பது, எவ்வாறு நீங்கள் வேறு வேலைக்கு மாறுகிறீர்கள், எத்தகைய வேலைக்கு "விசா' வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தே அமையும். "எச்1பி விசா' வைத்திருப்பவர்கள், அபராதம் இன்றி வேறு வேலைக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் பணியில் சேரும் புதிய நிறுவனம், இந்த மாறுதலுக்கான எச்1பி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் ஏற்கனவே "எச்1பி விசா' வைத்திருப்பதால், இது "எச்1பி விசா' உச்ச வரம்பு கட்டுப்பாட்டுக்குள் வராது.எல் "விசா' என்பது, ஒரு நிறுவனம் தனது ஊழியரை அமெரிக்காவிலுள்ள கிளை அலுவலகத்துக்கு மாற்றுவதாகும். அதனால், அதே "விசா'வில், அமெரிக்காவில் புதிய நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது.
புதிய வேலை கிடைத்தால், அதில் சேர்ந்து பணியைத் துவங்குவதற்கு முன், அந்த நிறுவனம் ஊழியருக்காக "எச்1பி விசா' விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அந்த ஊழியர் அமெரிக்காவிலிருந்து தனது நாட்டிற்குத் திரும்பி வந்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் புதிய விசாவை பெற்றுச் செல்ல வேண்டும்.
சுற்றுலா மற்றும் வர்த்தகம் சார்ந்த பி1/பி2 வகை விசாவில் செல்பவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த சம்பளம் பெறும் பணியில் சேர முடியாது. இந்த வகை விசாவில் அமெரிக்காவில் இருக்கும் போது, ஏதேனும் வேலை கிடைத்தால், அதற்குரிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கேள்வி: கணவமார்களின் சார்பு "விசா'வில் உள்ள மனைவிமார்கள் வேலை செய்வதற்கு அமெரிக்கா ஏன் அனுமதிக்க மறுக்கிறது?
பதில்: தகுதியுள்ள நபர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் "எச்1பி விசா'வின் கீழ் வேலை செய்யலாம். அவர்களின் மனைவிமார்கள், வேலை தரும் நிறுவனம் அனுப்புவதாக இருந்தால், "எச்1பி விசா'வுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் தங்களின் கிளை அலுவலகங்களுக்கு மாற்றல் செய்யும், "எல்1 விசா'வில் இருப்பவர்களின் மனைவிமார்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், அதாவது, "ஜே1 விசா'வில் செல்பவர்கள், தூதரக அதிகாரிகளுக்குரிய, அதாவது, "ஏ1 விசா'வில் செல்வபவர்களின் மனைவிமார்கள், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைத் துறையிலிருந்து (USCIS) உரிய அனுமதி வாங்கியிருந்தால், வேலை செய்யலாம். மேலும் விவரம் அறிய, காண்க: https://secure.ssa.gov/apps10/poms.nsf/Inx/0110211420.