>>>"ஆங்கிலம் எளிது': அசத்தும் மாணவர்கள்!

தமிழ் பாடத்திலேயே தடுமாறும் மாணவர்களுக்கு மத்தியில், கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஆங்கிலத்தில் "டாண் டாண்' என பதில் அளிக்கின்றனர், எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள். எப்படி இவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர்? இவர்களோடு உரையாடியதில் இருந்து...
எங்களை ஆங்கிலம் படிக்கத் தூண்டியவர், எங்கள் வகுப்பு ஆசிரியை கனகலெட்சுமி தான். தமிழை எளிமையாக படிக்க கற்றுக் கொடுத்த, அவர் படிப்படியாக, ஆங்கில இலக்கணத்தையும் கற்று தந்தார். எந்த மொழியையும் இலக்கணத்தோடு கற்றால் தான், எழுதுவதில் பிழை வராது என்பார் ஆசிரியை. முதலில் எளிமையாக, ஒரு வாக்கியம் எழுதுவதை பற்றி சொல்லி கொடுத்தார். இப்போது, ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் உள்ள பல்வேறு சொற்களைப் படிக்கும் வகுப்புகள் நடக்கின்றன. முதலில், கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஒரு நாளைக்கு, ஐந்து புதிய சொற்கள் என்ற கணக்கில் வகுப்புகள் நடக்கும். அந்த ஐந்து புதிய சொற்களை உச்சரிக்கும் முறை, தமிழ் அர்த்தம் சொல்லி கொடுப்பார். அடுத்த நாள் எழுத்து தேர்வு நடக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு பரிசு உண்டு. தற்போது, 200 ஆங்கில வார்த்தைகள் எங்களுக்கு தெரியும். அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தைகளை படிப்பதால், மற்றவர்கள் பேசும் போது ஓரளவுக்கு புரிகிறது. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும், தனித்தனி அட்டவணை போட்டு, அந்த எழுத்தில் உள்ள விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பூக்கள் என, அனைத்து படங்களையும் ஒட்டி, அவற்றின் கீழ் அதற்கான ஆங்கில வார்த்தைகளை எழுதுவோம். வார இறுதி நாளில் நடக்கும் ஆங்கில வகுப்பில், குழுக்களாகப் பிரிந்து, வார்த்தை போட்டிகளில் ஈடுபடுவோம். எதையும் கடமையே என்று நினைக்காமல், விளையாட்டுப் போக்கிலும், கதை வடிவிலும் கற்றால், ஆங்கிலமும் எளிமையான பாடமே. எங்கள் ஆசிரியை துவக்கி வைத்த பயிற்சி இது. கற்பதற்கான அடித்தளம் சிறப்பாக அமைந்துவிட்டால் எதையுமே கற்க முடியும்.