தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூவர் குழு
அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை
வேந்தராக இருந்தவர், கல்யாணி. இவரது, பதவிக்காலம் கடந்த, ஏழு மாதங்களுக்கு
முன்பே முடிந்தது. இந்நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள்
நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான மூவரை
தேர்வு செய்வதற்கான மூவர் குழுவை, கவர்னர் நியமித்துள்ளார். இக்குழுவிற்கு,
கவர்னரின் பிரதிநிதியாக, போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக, இணைவேந்தரும்,
சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தருமான தியாகராஜன், தலைவராக நியமிக்கப்
பட்டுள்ளார். அரசு சார்பில், உடுமலைப்பேட்டை, ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி
மகளிர் கல்லூரி முதல்வர், மஞ்சுளா; சிண்டிகேட் அமைப்பு சார்பில், காந்தி
கிராம பல்கலைக்கழக, கணித துறை தலைவர், பாலசுப்ரமணியன் ஆகியோர்,
உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்தகுழு, துணை வேந்தர் பதவிக்கு
விண்ணப்பிப்பவர்களின் தகுதிகளை பரிசீலித்து, அதில் மூவரது பெயரை,
கவர்னருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை, திறந்த நிலை பல்கலைக்கழக துணை
வேந்தராக, கவர்னர் நியமிப்பார்.