>>>கற்றல், கேட்டல் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய விருப்பமா?

மாணவர் பருவத்தில் அல்லது இளைஞர் பருவத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு, கீச்சு குரல் இருக்கும். பெண்களைப் போல் இருக்கும் அந்த குரலால், அவர்கள் பல இடங்களில் கிண்டலுக்கு ஆளாகி, அவமானமாக உணர்வர். இதுபோன்ற நபர்களுக்கு வாய்ஸ் தெரபி சிகிச்சை தேவைப்படுகிறது.
நோக்கம்
பேசும் திறனை மேம்படுத்துவது ஒரு அம்சம் என்றால், கேட்கும் திறன் மற்றொரு அம்சம். ஆடியாலஜிஸ்ட் அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜிஸ்ட்(ASLP) எனப்படும் மருத்துவரின் ஒட்டுமொத்தமான நோக்கம் என்னவெனில், இந்தப் பிரச்சினையைக் கொண்டிருக்கும் அனைத்து வயது மக்களுக்கும் உதவிசெய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே.
இந்தப் பணிக்கான வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள் மொத்தம் 3 பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
* ஆடியாலஜி - இது கேட்பது தொடர்பானது
* ஸ்பீச் - இது குரல் செயல்பாடுகள் தொடர்பானது
* லாங்க்வேஜ் - இது ஒருவரின் மொழி புரிந்துணர்வு திறன் தொடர்பானது.
சோதனைகளின் பேட்டரி மூலம், பிரச்சினையை அளவிட அல்லது பரிசோதிக்க, இத்துறை நிபுணர்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள். வாய்ஸ் பயிற்சிகள் மற்றும் நீண்ட கவுன்சிலிங் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஒலியளவை அதிகப்படுத்த, hearing aids மற்றும் cochlear implants போன்ற சாதனைங்களை சோதனை செய்து அவற்றை பரிந்துரைக்கிறார்கள் ASLP நிபுணர்கள். இத்துறையானது, ஒரு கூட்டு செயல்பாட்டுத் துறையாகும். இத்துறை நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், ஆகுபேஷனல் தெரபிஸ்டுகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
பலவிதமான குறைபாடுகள்
கேட்டல் மற்றும் பேசுதல் குறைபாடுகள், பல காரணங்களால் ஏற்படுகின்றன. சில குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றின் பாதிப்புகளால் ஏற்படும். மேலும் சில, கேட்டல் கோளாறுகள், கற்றல் குறைபாடுகள், வளர்ச்சி தாமதங்கள், ஆடிஸம், வாய் அமைப்பில் ஏற்படும் பிளவு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. சிலருக்கு திக்குவாய் உள்ளிட்ட பலவிதமான பேச்சு தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். சிலருக்கோ, விழுங்குதல் கூட கடினமாக காரியமாக இருக்கும்.
BASLP படிப்பு
இளநிலை ஆடியாலஜி அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜி(BASLP) எனப்படும் படிப்பானது, துணை மருத்துவ அறிவியல்களுக்கான மணிப்பால் கல்லூரியில் வழங்கப்படுகிறது. டெல்லியிலுள்ள எய்ம்சில், 3 வருட B.Sc in Hearing and Speech படிப்பு வழங்கப்படுகிறது. BASLP படிப்பில், 4ம் வருடத்தில் ஒரு கூடுதல் அம்சமாக, கட்டாய இன்டர்ன்ஷிப் உள்ளது.
படிப்பிற்கான அங்கீகாரம்
BASLP படிப்பானது, கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய ரீஹேபிலேஷன் கவுன்சிலால்(RCI) பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ரீஹேபிலேஷன் தொடர்பான படிப்புகளை தரப்படுத்துவது, இந்த கவுன்சிலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த BASLP படிப்பானது, ஒருவர் இத்துறையில் பயிற்சி பெறும் தகுதியை அளிக்கிறது.
அதேசமயம், ஒருவர் பயிற்சியைத் தொடங்கும் முன்பாக, RCI -ல் பதிவுசெய்ய வேண்டும். இன்றைய நிலையில், இந்தியாவில், இத்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்கும் மொத்தம் 54 கல்வி நிறுவனங்களை RCI அங்கீகரித்துள்ளது.
இளநிலை படிப்பில் சேரும் தகுதிகள்
நீங்கள் பள்ளி படிப்பில் இயற்பியல் மற்றும் வேதியியலை கட்டாயம் படித்திருக்க வேண்டும். மூன்றாவது பாடமாக, கணினி அறிவியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், உளவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்கலாம்.
Hearing-Language-Speech துறையில் டிப்ளமோ(DHLS) படித்தவர்கள் மற்றும் 2 வருட பணி அனுபவம் உடையவர்கள், BASLP படிப்பில் நேரடியாக இரண்டாவது வருடம் சேரலாம். 2 வருட DHLS படித்த ஒருவர், முழுமையாக பயிற்சியளிக்கப்பட்ட பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரியின் கீழ், ஸ்பீச் அன்ட் ஹியரிங் டெக்னீசியனாக பயிற்சி எடுக்கலாம்.
தேர்வு முறைகள்
ஒவ்வொரு கல்வி நிறுவனம் தனக்கான சொந்த நுழைவுத்தேர்வை வைத்துள்ளன. பல வளாகங்களை வைத்துள்ள Ali Yavar Jung national institute for the hearing handicapped(AYJIHH), தனது அனைத்து வளாகங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வையே நடத்துகிறது. கடந்த 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, நாட்டிலேயே பழமையான, அகில இந்திய ஸ்பீச் மற்றும் ஹியரிங் கல்வி நிறுவனம், ஒரு நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வானது, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி நன்மை
இப்படிப்பிற்கான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்கையில், அது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டதாக இருந்தால் பயன்கள் அதிகம். இதன்மூலம், பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆராயச்சி நிறுவனங்கள்
AIISH நிறுவனமானது, இத்துறை நிபுணர்களால் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிறுவனம், பொது மக்களுக்கான சேவையை வழங்குவதால், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக திகழ்கிறது. பல இடங்களிலிருந்து வரும் நோயாளிகளின் மூலம் பரவலான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம், இந்தக் கல்வி நிறுவனத்தின் புகழ் மற்றும் குறைந்த கல்விக் கட்டணம் போன்ற காரணிகளால், இங்கே இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்நிறுவனத்தில், இளநிலைப் படிப்பை மேற்கொள்ள முடியாதவர்கள், முதுநிலைப் படிக்க இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படிப்பை மேற்கொள்ள ஸ்பீச் லாங்குவேஜ் அல்லது ஆடியாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முதுநிலைப் படிப்பிற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள், இ.என்.டி, நியூராலஜி, சைக்யாட்ரிக், பீடியாட்ரிக்ஸ், சர்ஜரி மற்றும் ஆன்காலஜி ஆகிய துறைகளுடன், நெருங்கி பணிபுரிவார்கள். மேலும், குழந்தைகளுக்கான வாய்ஸ் அல்லது ரீஹேபிலேஷன் தொடர்பான சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மையங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு.
இவைத்தவிர, சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப கால சிகிச்சை மையங்கள் போன்றவற்றில் பணிவாய்ப்புகளை பெறலாம். மேலும், வெளிநாட்டு மற்றும் ரெகுலர் பள்ளிகள், தங்களுடைய மாணவர்களின் பிரச்சினைகளுக்காக ASLP நிபுணர்களை தொடர்பில் வைத்துள்ளன. இந்த வழக்கத்தை, வேறு பல பள்ளிகளும் பின்பற்ற தொடங்கிவிட்டன.
இத்துறை நிபுணர் ஒருவர், தனியார் ஆலோசகராகவும் இருக்கலாம். ஆனால், புதிதாக படித்து இத்துறையில் நுழையும் ஒருவர் ஆலோசகர் ஆவது கடினம். ஏனெனில், இதற்கான முதலீடும், பரவலான தொடர்பும் தேவை.
சம்பளம்
இத்துறை வருமானம், இடத்திற்கு இடம் மாறுபடும். நிலையானது என்று எதுவுமில்லை. இத்துறையில் முதுநிலைப் படிப்பு முடித்து, அனுபவமின்றி, ஒரு நல்ல மருத்துவமனையில் பணிக்கு சேரும் ஒருவர், மாதம் ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை பெறுகிறார்.
தொழில்துறை பணிவாய்ப்பு
Hearing aids உள்ளிட்ட, இத்துறை தொடர்பான மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் மூலமாக பணி வாய்ப்புகள் உண்டு. இன்றைய நிலையில், நாட்டில், இத்துறை தொடர்பான சாதனங்களை தயாரிக்கும் குறைந்தபட்சம் 8 முதல் 10 வரையான பிரபல நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்களுக்கு, அச்சாதனங்களின் பயனாளர்கள் மற்றும் நோயாளிகளிடமிருந்து கருத்துக்கள் தேவை. அந்த கருத்துக்களைப் பெற்று தருபவர்களாக ASLP நிபுணர்கள் விளங்கி, பணி வாய்ப்புகளை அளிக்கிறார்கள்.
தொழில்நுட்ப அனுகூலம்
கடந்த 70 மற்றும் 80ம் ஆண்டுகளில், மருத்துவ பரிசோதனை செயல்பாடுகள் என்பவை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடுமையாக உணரும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ, தொழில்நுட்பத்தின் உதவியால், பல நவீன, மேம்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிவைக் கொண்டிருப்பது அவசியம்.
அறுவை சிகிச்சையின்போது மற்றும் அதற்கு பிறகான நிலைமைகளில், சாதனம் சரியாக பொருந்தியிருக்கிறதா மற்றும் நோயாளி சூழலுக்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்கிறாரா என்பதை மதிப்பிடுவது இத்துறை நிபுணர்களின் முக்கியப் பணிகளில் ஒன்று.
என்ன தேவை?
பேசுதல் மற்றும் கேட்டல் குறைபாடானது, பொதுவாக, சமூக அளவிலான ஒரு மதிப்பு குறைபாடாக கருதப்படுகிறது. மேலும், இத்துறை நிபுணர்கள், தங்களிடம் வரும் மருத்துவ பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது. ஏனெனில், பல பெற்றோர்கள், தங்களது குழந்தைக்கு இதுபோன்ற ஒரு குறைபாடு இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களால் அதை தாங்கிக்கொள்வதும் கடினம்.
எனவே, அதீத பொறுமையையும், கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கைக்கொண்டு, ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இத்துறை நிபுணருக்கு உள்ளது. இத்தகைய கடும் முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும் பலன்கள், அதீத சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்கும்.