>>>மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி திடீர் ராஜினாமா

 
மாநிலத் திட்டக்குழு கல்வித் துறை உறுப்பினர் பாலகுருசாமி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம்,  மாநிலத் திட்டக்குழு மாற்றி அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சாந்த ஷீலா நாயர், திட்டக்குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். குழுவின் முழுநேர உறுப்பினராக, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன், பகுதிநேர உறுப்பினர்களாக, முத்தையா (தொழிற்துறை), சாந்தா, ஸ்ரீதர் (சுகாதாரம்), ராமசாமி (வேளாண் மற்றும் பாசனம்), பாலகுருசாமி (கல்வி) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சிறந்த கல்வியாளர் என்பதால், மாநிலத் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பகுதிநேர உறுப்பினர்களின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகள். ஆனால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில், பாலகுருசாமி ராஜினாமா செய்துள்ளார். கல்வித் துறையில், குறிப்பாக உயர் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து, பாலகுருசாமி தெரிவித்த ஆலோசனைகள், பரிந்துரைகள் எதுவும் ஏற்கப்பட வில்லை என, கூறப்படுகிறது. அதனால், பெயருக்கு பதவி வகிப்பதை விரும்பாமல், அவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. பாலகுருசாமிக்கு பதில், வேறு யாரும் நியமிக்கப்பட வில்லை. அதேபோல், கிறிஸ்டோபர் நெல்சன், சமீபத்தில் மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையராக நியமிக்கப்பட்டார். அதனால், முழுநேர உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது.