>>>மாணவர்களை வரவேற்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு கல்வி அமைப்பானது, முறைப்படுத்தப்பட்ட மற்றும் பணி வாய்ப்புகளை பெறுவதற்குரிய படிப்புகளை, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்குகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்
* உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்
* பலதரப்பட்ட படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள்
* பிரான்ஸ் நாட்டின் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு,
* அந்நாட்டு அரசு அளிக்கும் உயர்ந்தபட்ச மானியங்கள்
* 3500க்கும் மேற்பட்ட உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நெட்வொர்க்.
பிரான்ஸ் நாட்டில் பலதரப்பட்ட துறைசார்ந்த படிப்புகள் வழங்கப்பட்டாலும், பொறியியல், மேலாண்மை, மொழி மற்றும் கலாச்சாரம், வணிகம், பேஷன், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிடி போன்ற துறைசார்ந்த படிப்புகளே, அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுகின்றன.
நிதி சார்ந்த ஆதரவு மற்றும் உதவிகள்
ஒவ்வொரு ஆண்டும், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிலுள்ள பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் மூலமாக, இந்தியாவைச் சேர்ந்த இளநிலை முதல் பி.எச்டி நிலை வரையிலான மாணவர்களுக்கு, 100 உதவித்தொகைகள் வரை வழங்குகிறது. மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தின் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
வகுப்பறை அனுபவம்
பிரான்ஸ் நாட்டு கல்வியமைப்பானது, தியரி மற்றும் நடைமுறை அனுபவம் ஆகிய 2 விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதிகபட்ச முறைப்படுத்தப்பட்ட கற்பித்தலானது, நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்படுகிறது.
இந்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களின் படிப்பை எந்த சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிக்க, வருகைப் பதிவு மற்றும் தேர்வு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Case studies, Internships and Presentations போன்றவை, பிரான்ஸ் நாட்டின் உயர்கல்வி வகுப்பறைகளில் முக்கியமான அம்சங்கள். மேலும், ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களுடன், உரையாடும்படி, சர்வதேச மாணவர்கள் ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.
படித்து அனுபவம் பெறுக...
பிரான்சில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான நிதி உதவியாக, உதவித்தொகை என்ற அம்சம் தவிர்த்து, பகுதிநேரமாக பணிபுரிந்தும், தேவையான நிதி ஆதாரங்களைப் பெறலாம். மேலும், தேசிய மாணவர் நலத் திட்டத்தில் இணைந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, படிப்பின்போது, பகுதிநேரமாக பணிபுரியும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் படிப்பை பற்றிய மேலதிக விபரங்களுக்கு http://www.campusfrance.org/fr/ என்ற வலைத்தளம் செல்க.