>>>உதவி நூலகர் பணி வழங்க மறுப்பு: துணைவேந்தருக்கு நோட்டீஸ்

தகுதியானவருக்கு உதவி நூலகர் பணி வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த மனோன்மணி, தாக்கல் செய்த மனுவில், நான், மதுரை காமராஜ் பல்கலை நூலகத்தில் உதவியாளராக சேர்ந்தேன். 18 ஆண்டுகளுக்கு பின் 2009ல் தொழில்நுட்ப உதவியாளரானேன். 2011 டிசம்பர் 27ல் நூலகப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றேன்.
எனக்கு உதவி நூலகராக தகுதியுள்ளது. 2008ல் ஆறு உதவி நூலகர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தகுதி இருந்தும் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. 2011 பிப்ரவரி 3ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், எனக்கு உதவி நூலகர் பணியிடம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படியும் பதவி உயர்வு வழங்கவில்லை.
இதுகுறித்து துணைவேந்தர், பதிவாளரிடம் முறையிட்டும் பயனில்லை. எனக்கு உதவி நூலகர் பதவியிடம் வழங்க உத்தரவிட வேண்டும், என கோரினார். நீதிபதி வினோத்குமார் சர்மா முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜரானார். இதுபற்றி விளக்கம் அளிக்க, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.