>>>"புகைபிடிப்பதால் உருவாகும் உயிர்க்கொல்லி நோய்': நவ., 14, உலக சி.ஓ.பி.டி., நோய் தினம்

பத்து பயங்கர உயிர்க்கொல்லி நோய்கள் பட்டியலில், 1990ல் 6வது இடத்தில் இருந்த சி.ஓ.பி.டி., நோய், இன்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2020ல் இது 3வது இடத்திற்கு முன்னேறும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 23 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 சதவீதம் பேர் ஆண்கள். 38 சதவீதத்தினர் பெண்கள்.
நோயின் அறிகுறிகள்: வேகமான சுவாசித்தல், மூச்சை வெளியிடுவதற்கு அதிக நேரம் எடுத்தல், மார்பளவு அதிகரித்தல், முக்கியமாக முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கான அளவு அதிகரித்தல், சுவாசித்தலுக்காக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் அதிகம் பயன்படுவது, உதடுகளை சுழித்து மூச்சு இழுத்தல், மார்பின் குறுக்கு மற்றும் நெடுக்கு வீதம் அதிகரிப்பது இதன் அறிகுறிகள்.சி.ஓ.பி.டி., நோய்க்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பதே.
இந்நோய் உருவாவதற்கான வாய்ப்பு, வயது அதிகமாகும்போது அதிகரிக்கிறது. வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்கும் அனைவருக்குமே சி.ஓ.பி.டி., தோன்றும். எனவே புகைபிடிப்பதை நிறுத்துவது அவசியம். இதற்கு மனஉறுதி அவசியம். சி.ஓ.பி.டி., நோய் 40 வயதை கடந்தவர்களுக்கு அதிகம் வருகிறது. இதனால் அவர்களின் சாதாரண வேலையைக் கூட செய்ய இயலாமல், மூச்சுத் திணறல் ஏற்படும். பகல், இரவு நேரங்களில் இடைவிடாது இருமல், மஞ்சள் கலந்த பச்சைநிறசளி அடிக்கடி வரும். பேச, நடக்க சிரமமாக இருப்பது, உதடு அல்லது விரல் நகங்கள் நீலம் அல்லது சாம்பல்நிறத்தில் இருப்பது, இருதயத் துடிப்பு வேகமாக, சீரற்று இருப்பது, மருந்தை எடுத்துக் கொண்ட பிறகும் நிவாரணம் கிடைக்காமல் மூச்சிரைப்பு இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.
கண்டறியும் பரிசோதனை: நுரையீரல் பரிசோதனைக்காக சில பரிசோதனைகள் உள்ளன. ஸ்பைரோமெட்ரி என்ற எளிய சோதனை மூலம், நுரையீரலுடைய செயல் திறன், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கண்டறியலாம். இதன் மூலம் எதிர்கால நுரையீரல் பிரச்னைகளை முன்கூட்டியே அறியலாம்.ஆறு நிமிட "வாக் டெஸ்ட்': இதில் நோயாளிகள் 6 நிமிடங்கள் நடப்பர். அதில்அவர்களின் நுரையீரல் செயல் திறனை அறியலாம்.இந்நோயை கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் வாய்ந்த சிகிச்சைகள் உள்ளன.
குறிப்பாக இன்ஹேலர் சிகிச்சை உலகளவில் சிறந்தது. மேலும் விலையுயர்ந்த மருத்துவச் செலவையும் வீட்டிலேயே ஆக்சிஜன் சிகிச்சைக்கு உட்படுத்துவதை தவிர்க்கலாம்.இதன் மூலம் சிரமமின்றி சுவாசிக்க முடியும். நன்கு தூங்க முடியும். அன்றாட வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தொடரலாம்.கட்டியான பச்சை நிற சளியை கரைக்க, "மியூக்கோ லைட்டிக்' மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.சி.ஓ.பி.டி.,யை கண்டறிதல் மூலம் இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க முடியும். இதற்காக மதுரை ஷெனாய்நகர், செஸ்ட்கிளினிக்கில் நவ., 16, 17 ல் பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது.-டாக்டர் எம்.பழனியப்பன் நுரையீரல் நோய் நிபுணர்மதுரை. 98421 16070.