>>>20 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான மையங்கள், அரசு கல்லூரிகளில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, ஆறு கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.தமிழகத்தில் உள்ள, 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம் மூலம், இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் பருவ தேர்வுகளில், இப்பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு வாரத்திற்கு, எட்டு மணி நேரம் என்ற கணக்கில், நடப்புக் கல்வியாண்டில் பயிற்சி தரப்படும்.கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வளாக தேர்வில், எந்தெந்த காரணங்களால், மாணவர்கள் தோல்வியடைகின்றனர் என்பதை கண்டறிந்து, அதை போக்க இப்பயிற்சி உதவிடும். பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவம், சில்லரை வணிகம் என, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பணி சார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, வாக்கியங்களை, தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரித்தல் போன்ற பயிற்சிகள், இதில் அடக்கம்.ஒவ்வொரு துறைவாரியான பயிற்சி, தன்னம்பிக்கை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்தும், பயிற்சி பாடத்தில் அடங்கும்.அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், பயிற்சி அளிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பயிற்சி அதிகாரி கூறியதாவது:இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, முன்தேர்வு நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணலை சந்திக்கும் மாணவர்களுக்கு, இப்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். பயிற்சி மையங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.