>>>2013ல் பயோமெட்ரிக் கார்டு சாத்தியமா?

ரேஷன் கார்டுக்கு பதில், பயோமெட்ரிக் கார்டு, 2013ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வர சாத்தியமில்லை என, அதிகாரிகள் கருதுகின்றனர்.தமிழகம் முழுவதுமாக, 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன; போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, முழு தணிக்கை செய்து, பல லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. தேவையான ஆவணங்களை வழங்கினால், ஒரு மாத காலத்தில், ஆய்வுக்கு பின், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.  பத்து மாதத்தில், எட்டு மாவட்டங்களில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய கார்டு வழங்கப்பட்டது. இதுபற்றி சந்தேகம் எழுந்தது. மீண்டும் போலி கார்டுகளை கண்டறிய இரண்டாம் கட்ட தணிக்கை நடக்கிறது.இதுபற்றி வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், முதியோர் உதவித் தொகை,1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ரேஷன் கார்டிலிருந்து, பெற்றோரை பிரித்து, தனி கார்டு வாங்கி, தவறான முறையில், முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளியானது. மாவட்டந்தோறும், 1,000 புதிய ரேஷன்கார்டுகள், முதியோர் உதவித் தொகை பெறுவதற்காகவே வாங்கியுள்ளனர். எட்டு மாவட்டங்களிலும், போலியாக வாங்கிய ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது. கடந்த, எட்டு மாதங்களாக, இப்பணி நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துடன், புதிய கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, ஏற்கனவே விண்ணப்பித்து, தகுதி உடையவர்களுக்கு மட்டும், புதிய கார்டுகள் வழங்கப்படுகின்றன. தணிக்கை முடிந்த பின், பயோ மெட்ரிக் கார்டுகளுக்கு, போட்டோ எடுத்தல், பத்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்தல், ரேஷன் ஊழியர்களின், கைரேகை பதிவு செய்தல், கடைகளுக்கான கணினி மற்றும் ரேகை பதிவு இயந்திரம் வாங்கி, தனி சாப்ட்வேர் மூலமாக,இணைத்து, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இப்பணிகள் நடைபெற ஓராண்டுக்கும் மேலாகும். தமிழகம் முழுவதுமாக தற்போது, 10 சதவீதம் தான் பணி நடந்துள்ளது. அதுவும், வனம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் முதற்கட்டமாக இப்பணி நடந்துள்ளது. எனவே, 2013ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வழக்கம் போல, கூடுதல் இணைப்புத் தாள் இணைக்கப்படும். பயோமெட்ரிக் கார்டு வழங்கும் திட்டம், 2013ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர சாத்தியமில்லை.என அதிகாரிகள் கூறினர்.